மூங்கில்துறைப்பட்டில், கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்


மூங்கில்துறைப்பட்டில், கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:45 PM GMT (Updated: 29 Oct 2019 6:00 PM GMT)

மூங்கில்துறைப்பட்டில் அரசியல் கட்சியினர் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு ஊராட்சிக்கு அரசு ஒதுக்கிய நிதியை கையாடல் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மூங்கில்துறைப்பட்டு பயணிகள் நிழற்குடை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவேண்டும். பயணிகள் நலன்கருதி பஸ்நிறுத்தம் அருகில் கழிப்பறை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அக்டோபர் 29-ந்தேதி(அதாவது நேற்று) ஒருநாள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று காலை மூங்கில்துறைப்பட்டில் உள்ள மளிகைக்கடை, பெட்டிக்கடை, ஓட்டல்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதி, கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூங்கில்துறைப்பட்டு கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அப்பாவு, தி.மு.க. நிர்வாகி விஜய்ஆனந்த், வி.சி.க. நிர்வாகி சிலம்பன், வணிகர் சங்க செயலாளர் வாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ், சவுரிராஜன், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் பழனிவேல், வேலு, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story