மக்கள் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை


மக்கள் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2019 5:00 AM IST (Updated: 30 Oct 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்தார்.

நெட்டப்பாக்கம்,

புதுச்சேரி அரசின் வருவாய்த்துறை சார்பில் “மக்கள் குரல்” என்ற பெயரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டமன்ற தொகுதிவாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஒரே நேரத்தில் அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்றுக் காலை ஏம்பலம் தொகுதியில் அமைந்துள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “மக்கள் குரல்” குறை தீர்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அரசின் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குறை தீர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாமில் நாராயணசாமி பேசியதாவது:-

இந்த முகாமில் 20 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு உள்ளனர். நெட்டப்பாக்கம் தொகுதியில் நடந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்த 80 சதவீத குறைகளை நிவர்த்தி செய்துள்ளோம். கிராமத்தினர் தங்கள் குறைகளை கூற நகரத்திற்கு வருவதில்லை.

மக்களுக்கு எந்த குறைகள் இருந்தாலும் அதனை தீர்க்க அரசு தயாராக உள்ளது. நிவர்த்தி செய்யப்படக்கூடிய முறையான குறைகள் அனைத்தும் 30 நாட்களுக்குள் சரி செய்யப்படும். கோவில் நிலத்திலும், அரசு புறம்போக்கு இடத்திலும் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் நலன் காப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில் மக்கள் நலன்காக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதனை நிறைவேற்ற விடாமல் தடுத்து சில அதிகாரிகள் முட்டுக்கட்டைபோடுகிறார்கள். அதனால் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியவில்லை.

திட்டங்களை நிறைவேற்றுவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நாங்கள் திட்டத்தை கொண்டு வந்தால் அதனை நிறைவேற்ற வேண்டியது அதிகாரிகளின் வேலை. ஆனால் ஏதாவது குறைகளைக்கூறி கோப்புகளை அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த முகாமிற்கு அரசின் சில துறைகளின் செயலாளர்கள் வராதது கண்டனத்திற்குரியது. தலைமைச்செயலாளர், கல்வித்துறை செயலாளர் வர இயலாது என கூறி முன்கூட்டியே அனுமதி பெற்றனர். மற்றவர்கள் யாரும் பணியில் இருந்தும் முகாமிற்கு வரவில்லை. முகாமில் பங்கேற்காத துறை செயலாளர்களிடம் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் திட்டத்தை சட்டத்தை மீறி செயல்படுத்த வேண்டியதில்லை. சட்டத்தை வளைத்தாவது திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறையில் பல சாதனைகளை செய்து வருகிறோம். மத்திய அரசும், கவர்னர் கிரண்பெடியும், உயரதிகாரிகளும் ஒத்துழைப்பு தந்தால் இந்தியாவில் முதன்மை மாநிலமாக புதுவை மாநிலத்தை மாற்றிக்காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

குறைதீர்ப்பு முகாமில் துறைவாரியாக ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பொது மக்கள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்தனர். வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ்களையும் கேட்டுப்பெற்றனர்.

Next Story