வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.4,500 லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது


வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.4,500 லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2019 10:00 PM GMT (Updated: 29 Oct 2019 6:43 PM GMT)

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மீஞ்சூர்,

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 50). இவருக்கு சொந்தமாக அத்திப்பட்டு ருக்மணி நகரில் வீட்டு மனை உள்ளது. அங்கு வீடு கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி பெறுவதற்கு மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு அங்கு இருந்த பெண் ஊழியர் பிரசன்னா (35) லஞ்சமாக ரூ.4,500 கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான போலீசார் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர்.

லஞ்சபணம் ரூ.4,500- ஐ அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்லப்பா, பிரசன்னாவிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த போலீசார் பிரசன்னாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். போலீசார் அவரை திருவள்ளூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் கூறுகையில்,‘

செல்லப்பா கொடுத்த புகாரின் பேரில் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து வீட்டு மனை அனுமதிக்கான பிரிவு ஊழியர் பிரசன்னாவை கைது செய்தோம். உயர் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதற்காக பணம் பெற்றதாக அவர் கூறினார் என தெரிவித்தார்.

Next Story