நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 7 பேர் மீது வழக்கு
வேலூர் மாவட்டத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
நாடு முழுவதும் கடந்த 27-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பட்டாசு வெடிப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருந்ததால் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் பல வீடுகளில் குழந்தைகளின் தொல்லை தாங்காமல் பெற்றோர் பட்டாசுகளை வெடித்தனர். இதை போலீசாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
ஆனால் சிலர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசுகளை வெடித்தனர்.
நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வேலூர் மாவட்டத்தில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், தெற்கு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், ராணிப்பேட்டை, ஜோலார்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 6 வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மேலும், வாணியம்பாடி தாலுகா குந்தானிமேடு கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (வயது 22) என்பவர் மீது வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் பட்டாசு வெடித்தபோது காயம் ஏற்பட்டதால் தற்போது சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story