ஜோலார்பேட்டை அருகே, மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
ஜோலார்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை ஒன்றியம் புள்ளானேரி ஊராட்சி, கோனேகுப்பம் பாட்டன் வட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர், கட்டிட தொழிலாளி. இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், 6 மாதம் கைக்குழந்தை உள்பட 3 மகள்கள் உள்ளனர்.
இவர்களின் மூத்த மகள் அனுஷா (வயது 4) பாட்டி வீடான அச்சமங்கலம் பகுதியில் தங்கி, திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். மற்ற 2 குழந்தைகளும் பெற்றோர்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அனுஷாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள். பின்னர் அனுஷாவை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். மறுநாள் மீண்டும் காய்ச்சல் வந்ததால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். டாக்டர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து பின்னர் பொது வார்டில் சேர்த்தனர். பின்னர் மாலையில் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் காலை அனுஷாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மருத்துவமனையில் அவளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து, பின்னர் ரத்த பரிசோதனை செய்தனர். பின்னர் அவளுக்கு மர்ம காய்ச்சல் உள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் அன்றிரவு அனுஷாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவளை மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அனுஷாவின் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அனுஷா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தாள்.
இதுகுறித்து தகவலறிந்ததும் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பி.சுமதி தலைமையில், டாக்டர் சுமன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ளவர்கள் யாருக்கும் மர்ம காய்ச்சல் இல்லை என மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை ஒன்றியம் சார்பில் புள்ளானேரி ஊராட்சி பகுதி முழுவதும் தீவிர கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது. நேற்று மாலை பாட்டன் வட்டத்தில் உள்ள மயானத்தில் மர்ம காய்ச்சலால் இறந்த சிறுமி அனுஷாவின் உடல் புதைக்கப்பட்டது.
மேலும் சிறுமி மர்ம காய்ச்சலால் இறந்தாளா? அல்லது டெங்கு காய்ச்சலால் இறந்தாளா? என டாக்டர்கள் ரத்த பரிசோதனைகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story