தண்ணீர் லாரி மீது கார் மோதி ஏர் இந்தியா மேலாளர் பலி மேலும் ஒருவர் படுகாயம்
சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது கார் மோதி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மேலாளர் பலியானார். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன்(வயது 55). இவர் மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மூத்த மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் ரவிசந்திரன் நேற்று முன்தினம் இரவு கால்டாக்சியில் பயணம் செய்தார். காரை பொன்னேரி, பழவேற்காட்டை சேர்ந்த டிரைவர் முகமது அசைன்(27) என்பவர் ஓட்டினார். இரவு கார் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, அறநிலையத்துறை அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் பயணம் செய்த ரவிசந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கைது
கார் டிரைவர் முகமது அசைனுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொது மக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் முகமது அசைனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரவிசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தண்ணீர் லாரியை சாலையோரம் நிறுத்திய விருதுநகர் மாவட்டம், சாத்தூர், காட்டான்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் வேல்முருகன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story