விருத்தாசலம் அருகே, ஆம்னி வேன் மீது மரம் சாய்ந்து விழுந்தது - 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


விருத்தாசலம் அருகே, ஆம்னி வேன் மீது மரம் சாய்ந்து விழுந்தது - 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 30 Oct 2019 3:30 AM IST (Updated: 30 Oct 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ஆம்னி வேன் மீது மரம் சாய்ந்து விழுந்தது. இதில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விருத்தாசலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது அண்ணன் பரமசிவம் (வயது 67). இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் குருப் பெயர்ச்சியையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு நேற்று முன்தினம் ஆம்னி வேனில் புறப்பட்டனர்.

அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டனர். இந்த ஆம்னி வேன் விருத்தாசலம் அடுத்த கோ.மங்கலம் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையோரத்தில் இருந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்து ஆம்னி வேன் மீது விழுந்தது. இதில் ஆம்னி வேன் பலத்த சேதமடைந்தது. மேலும் ஆம்னி வேனில் இருந்த பரமசிவம், இளங்கோவன் உள்ளிட்ட 5 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே ஆம்னி வேன் மீது மரம் விழுந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து ஆம்னி வேன் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். 

Next Story