172 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்


172 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:15 AM IST (Updated: 30 Oct 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

172 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

கபிஸ்தலம்,

அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் 2-ம் சேத்தி பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் 172 குடும்பங்களுக்கு நகர நிலவரி திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி அய்யம்பேட்டையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கும்பகோணம் ஆர்.டி.ஓ. வீராசாமி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் அசோக்குமார், கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நகர வங்கி துணைத்தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு நகர நிலவரி திட்டத்தின் கீழ் 172 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்.

நெல் சாகுபடி

தொடர்ந்து 5 பேருக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் வேளாண்மைத்துறை சார்பில் மானியத்துடன் கூடிய வேளாண்மை கருவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இலவச வீட்டு மனைப்பட்டா தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நடப்பாண்டில் இந்த மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை இந்த மாவட்டத்தில் ரூ.286 கோடி பயிர்க்காப்பீடு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இதனை பெற்று கொண்டு தொடர்ந்து இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முருகன், முருகதாஸ், கண்ணன், பழனிசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரகாசம், வேளாண்மை பொறியியல் துறை உதவி இயக்குனர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story