மாவட்டத்தில் 5-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்


மாவட்டத்தில் 5-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 8:28 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5-வது நாளாக நேற்று அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி முதல் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் ராமநாதன், சதீஷ், கோபி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர் களை நியமிக்க வேண்டும். கிராம சேவை செய்த டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் உள்ள டி.ஏ.சி.பி.ஐ. அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள்.

கிருஷ்ணகிரி, ஓசூர் உள்பட மாவட்டம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் 5 நாட்களாக வெளிநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளிகளுக்கு மட்டுமே டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்டம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 2 டாக்டர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தப்படி கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறினார்கள்.

Next Story