வேலூர் மாவட்டத்தில் வங்கிகள் சார்பில் ரூ.12,409 கோடி கடன் வழங்க திட்டம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்


வேலூர் மாவட்டத்தில் வங்கிகள் சார்பில் ரூ.12,409 கோடி கடன் வழங்க திட்டம் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:15 AM IST (Updated: 30 Oct 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் தொழில் கடனாக ரூ.12,409 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர், 

வேலூர் மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் வங்கிகள் சார்பில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டார். அதனை இந்தியன் வங்கி வேலூர் மண்டல மேலாளர் மாயா பெற்றுக்கொண்டார். நபார்டு வங்கியின் உதவிப்பொது மேலாளர் பங்காருகிரி முன்னிலை வகித்தனர்.

அதில் 2020-21 நிதியாண்டிற்கான வேளாண்மை பயிர்க்கடனாக ரூ.6,313 கோடி, விவசாய உள்கட்டமைப்பு கடனாக ரூ.348 கோடி, துணைத்தொழில் கடனாக ரூ.261 கோடி என விவசாயத்திற்காக மட்டும் ரூ.7,852 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கடனாக ரூ.1,781 கோடி, ஏற்றுமதி கடனாக ரூ.86 கோடி, கல்விக்கடனாக ரூ.729 கோடி, வீட்டுவசதி கடனாக ரூ.1,091 கோடி வழங்கவும், சூரியசக்தி பயன்பாட்டுக்கு ரூ.240 கோடி, சுய உதவி மற்றும் கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கான மற்றும் பிரதம மந்திரியின் ஜன்தன் மற்றும் பல காப்பீட்டு திட்டங்களுக்காக ரூ.615 கோடி, இதர சமூக கட்டமைப்பிற்காக ரூ.15 கோடி என மொத்தம் ரூ.12,409 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடுசியஸ், ரிசர்வ் வங்கி உதவிப்பொது மேலாளர் தாமோதரன், மாவட்ட திட்ட இயக்குனர் மாலதி மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story