வடகாடு மலைப்பகுதியில் மழை பெய்யாததால், பரப்பலாறு அணை நிரம்புவதில் சிக்கல்


வடகாடு மலைப்பகுதியில் மழை பெய்யாததால், பரப்பலாறு அணை நிரம்புவதில் சிக்கல்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:00 PM GMT (Updated: 29 Oct 2019 9:22 PM GMT)

வடகாடு மலைப்பகுதியில் மழை பெய்யாததால் பரப்பலாறு அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி ஆகும். பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 34 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும்் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

இதுதவிர சத்திரப்பட்டி, விருப்பாச்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பரப்பலாறு அணை திகழ்கிறது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம் குளம், பெருமாள்குளம், சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய குளங்கள் நிரம்புகின்றன.

இந்தநிலையில் வடகாடு மலைப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அணையில் சுமார் 25 அடி முதல் 30 அடி வரை வண்டல் மண் மற்றும் கழிவுகள் தேங்கி இருக்கிறது.

அணையில் தற்போது 5 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி மற்றும் விருப்பாச்சி பகுதிகளில் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

Next Story