போச்சம்பள்ளி அருகே, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி
போச்சம்பள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 10 மாத குழந்தை பலியானது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி அபிராமி. இவர்களுக்கு, லோகேஷ் என்ற 10 மாத கைக்குழந்தை இருந்தது. மதியழகன் வீட்டின் முன்பு, தரைமட்டத்தில் தண்ணீர் தொட்டி உள்ளது. நேற்று காலை மதியழகன் தண்ணீர் நிரப்ப தொட்டியை திறந்துள்ளார். அப்போது பின்னால் தவழ்ந்து சென்ற குழந்தை லோகேஷ், தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.
இதை கவனிக்காத மதியழகன் வீட்டுக்கு சென்று குழந்தையை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தொட்டியில் தேடிய போது குழந்தை தண்ணீரில் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக பாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினார். இதனால் அவர்கள் குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்று அடக்கம் செய்து விட்டனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 10 மாத குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story