கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனுமதியின்றி ரிக் வாகனம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனுமதியின்றி ரிக் வாகனம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது
x
தினத்தந்தி 29 Oct 2019 10:15 PM GMT (Updated: 29 Oct 2019 11:19 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி ரிக் வாகனம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்று கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ரிக் உரிமையாளர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெரியசாமி, உதவி கலெக்டர்கள் குமரேசன், தெய்வநாயகி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ரிக் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரிக் வாகனம் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரிக் உரிமையாளர்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவத்திற்கு கட்டணமாக ரூ.15 ஆயிரம் வங்கி வரைவோலை செலுத்தி கலெக்டரிடம் விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.

இந்த விண்ணப்பித்தினை 45 நாட்களுக்குள் பரிசீலனை செய்து நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும். மனுவை தள்ளுபடி செய்யும் முடிவை எடுக்கும் பட்சத்தில் எழுத்து பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி ரிக் வாகனம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என அறிவுறுத்தப் படுகிறது. ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வராத நிலையில் கேசிங் பைப்களை கட்டாயம் அகற்ற கூடாது. மீறினால் ரிக் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிணற்றின் வகை, ஆழம், பணி மேற்கொள்பவர், கிணற்றின் உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி, தொடர்பு விவரங்களை அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கிணறு தொடர்பான பணி மேற்கொள்ளும் போது கிணற்றை சுற்றிலும் முள்கம்பி வேலி அல்லது தகுதி தடுப்பு அமைக்க வேண்டும்.

ஆழ்துளை கிணற்றை சுற்றி சிமெண்டு காரையிலான தளம், நில மட்டத்திலிருந்து 3 மீட்டர் மேல்புறமும், 3 மீட்டர் நிலத்திற்கு கீழ் புறம் உள்ளவாறு, கட்ட வேண்டும். பணி இடைவேளையின் போது துளையிடப்பட்ட குழி அல்லது கிணறு சரியான முறையில் மூடப்பட்டு இருக்க வேண்டும். பணி முடிவுற்ற பின் கிணற்றை சுற்றி சகதி குழிகளையும், கால்வாய்களையும், மூட வேண்டும்.

கிணற்றின் மேல்புறத்தை எக்கு தகடுகளாலும், சரியான மூடியை கொண்டு இருப்பு குழாயின் மேல்புறத்தை திருகு மறை மூடி கொண்டு மூடப்பட்டு இருக்க வேண்டும். பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து அனுமதி ரத்து செய்யப்படும்.

மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஆழ்துளை கிணறுகள் உள்ள விவரத்தினையும், அதில் எத்தனை ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டில் உள்ளது, எத்தனை ஆழ்துளை கிணறுகள் பயன்பாடு இன்றி உள்ளது என்பதை கணக்கெடுக்க வேண்டும். நீர்வரத்து இல்லாத இடங்களில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை களிமண், மணல், சிறுகற்கள் மற்றும் பொருட்களை கொண்டு தரை மட்ட அளவிற்கு நிரப்ப வேண்டும்.

உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி ரிக் உரிமையாளர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இது சம்பந்தமான புகார்களை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்க கூடிய கட்டுபாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story