நாமகிரிப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் -வேன் மோதல்; வாலிபர் சாவு
நாமகிரிப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிளும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார். இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நாமகிரிப்பேட்டை,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கோபால புரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 23). இவரும், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியை சேர்ந்த இவரது நண்பர் முத்துக்குமார் (30) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக நாமகிரிப்பேட்டையில் இருந்து ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
இவர்களது மோட்டார் சைக்கிள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள செல்லியம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது, ஆத்தூரில் இருந்து நாமகிரிப்பேட்டை நோக்கி பூ லோடு ஏற்றி வந்த ஒரு வேனும், இவர்களது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் நண்பர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். முத்துக்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் முள்ளுக்குறிச்சி அருகே உள்ள பெரியாம்பட்டி ஊனாந்தாங்கல் பகுதியை சேர்ந்த பிரபு (26) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தினார்.
முன்னதாக விபத்து நடந்ததும் செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த இடத்துக்கு திரண்டு வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதோடு, உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story