கேரள வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 நக்சலைட்டுகளில் 2 பேர் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்


கேரள வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 நக்சலைட்டுகளில் 2 பேர் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 29 Oct 2019 11:49 PM GMT (Updated: 2019-10-30T05:19:15+05:30)

கேரள வனப்பகுதியில் கமாண்டோ போலீஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 நக்சலைட்டுகளில் 2 பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

சிக்கமகளூரு,

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நக்சலைட்டுகளை ஒழிக்க அந்தந்த மாநில போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இருப்பினும் அவ்வப்போது நக்சலைட்டுகள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் பாலக்கோடு வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்த கேரள மாநில கமாண்டோ போலீஸ் படையினர் அதிரடியாக வனப்பகுதிக்குள் புகுந்து நக்சலைட்டுகளை சுற்றி வளைத்தனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், கமாண்டோ போலீஸ் படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது.

இதில் ஒரு பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். மற்ற நக்சலைட்டுகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை கமாண்டோ போலீஸ் படையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இந்த நிலையில் கமாண்டோ போலீஸ் படையினர் சுட்டுக்கொன்றதில் ஒரு பெண் உள்பட 2 பேர் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அவர்கள் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா பெலகோடு கூடிகே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி மற்றும் மூடிகெரே தாலுகா அங்காடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மகேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் சுரேஷ் கடந்த 2004-ம் ஆண்டும், ஸ்ரீமதி கடந்த 2008-ம் ஆண்டும் நக்சலைட்டு அமைப்பில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்ரீமதி மீது 12 வழக்குகளும், சுரேஷ் மீது 40 வழக்குகளும் உள்ளது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

இதுபற்றி கமாண்டோ போலீஸ் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த பல வருடங்களாக கேரளாவில் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டும், 2017-ம் ஆண்டும் நக்சலைட்டுகள் தாக்குதலினால் சுமார் 30-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக 23 வழக்குகள் நக்சலைட்டுகள் மீது உள்ளது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் தற்போது ஒரு பெண் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விரைவில் நக்சலைட்டுகள் அனைவரையும் பிடித்து விடுவோம்“ என்று கூறினார்.

Next Story