‘அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்-மந்திரி’ ஆட்சியில் சமபங்கு குறித்து சிவசேனாவுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை - முதல்-மந்திரி பட்னாவிஸ் திட்டவட்டம்


‘அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்-மந்திரி’ ஆட்சியில் சமபங்கு குறித்து சிவசேனாவுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை - முதல்-மந்திரி பட்னாவிஸ் திட்டவட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2019 11:49 PM GMT (Updated: 29 Oct 2019 11:49 PM GMT)

ஆட்சியில் சமபங்கு குறித்து சிவசேனாவுக்கு வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை என்று முதல்-மந்திரி தேேவந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.

மும்பை,

இதுகுறித்து மும்பையில் உள்ள தனது ‘வர்ஷா’ பங்களாவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் போது, நாங்கள் இது குறித்து (மராட்டிய ஆட்சியில் சமபங்கு) பேசவில்லை. இப்படி ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டதா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக எங்களது கட்சி தலைவர் அமித்ஷாவிடம் கேட்டேன். அப்போது முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது என எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்து விட்டார்.

அப்படியென்றால் ஆட்சியில் சமபங்கு என சிவசேனா கூறுவது என்னவென்று நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். அது விரைவில் உங்களுக்கு தெரியவரும். சிவசேனாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி அளிப்பது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

பா.ஜனதா தலைமையில் அரசு அமைந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்குவோம். 5 ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்-மந்திரியாக இருப்பேன். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. பிரதமர் மோடியும் ஏற்கனவே எனது பெயரை முன்மொழிந்து விட்டார்.

கூட்டணி அரசு அமைப்பதில் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக இரு கட்சியினரும் அமர்ந்து பேசி முடிவு எடுப்போம். ஆனால் சிவசேனா தொடர்ந்து எங்களை விமர்சித்து வருவது பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சி அமைக்கும் விஷயத்தில் எங்கள் இரு கட்சிகளுக்கும் வேறு எந்த மாற்று ஏற்பாடுகளும் இல்லை. இந்த விஷயத்தில் ‘பி’ திட்டம் (வேறு கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது) எதுவும் இல்லை. ‘ஏ’ திட்டம் (பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி) வெற்றி பெறும்.

புதன்கிழமை(இன்று) நடைபெறும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Next Story