சினிமாக்களில் போலீஸ் கைகளில் ஆயுதங்களை கொடுக்காதீர்கள் திரைப்பட இயக்குனர்களுக்கு, பாஸ்கர்ராவ் வேண்டுகோள்


சினிமாக்களில் போலீஸ் கைகளில் ஆயுதங்களை கொடுக்காதீர்கள் திரைப்பட இயக்குனர்களுக்கு, பாஸ்கர்ராவ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Oct 2019 5:37 AM IST (Updated: 30 Oct 2019 5:37 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களிடம் தவறான எண்ணம் செல்வதால் சினிமாக்களில் போலீஸ் கைகளில் ஆயுதங்களை கொடுக்காதீர்கள் என்று திரைப்பட இயக்குனர்களுக்கு, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூரு,

‘குதஸ்தா‘ திரைப்படத்தின் ‘டிரைலர்‘ வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. இந்த விழாவில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் விழாவில் பேசும்போது கூறியதாவது:-

கன்னட திரைப்படங்களில் போலீஸ் அதிகாரிகளாகவும், போலீஸ்காரர்களாகவும் நடிக்கும் நடிகர்கள் விசித்திரமாக காட்டப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு எதிரிகளை தாக்குகிறார்கள். இது தவறான வழிகாட்டல். ஆனால் இந்த காட்சிகளுக்கு திரையரங்குகளில் கைத்தட்டல், விசில் சத்தம் பலமாக கேட்கிறது.

இத்தகைய திரைப்படத்தின் மூலம் சமுதாயத்துக்கு இயக்குனர்கள் கூறவருவது தான் என்ன? என்பது தெரியவில்லை. சினிமாக்களில் இதுபோன்ற காட்சிகளை காட்டுவது சமுதாயத்துக்கு ஆபத்தானது. ஏனென்றால் இதை பார்த்துவிட்டு ரவுடிகள் ஆயுதங்களை எடுத்து ‘ஹீரோ‘ ஆக நினைக்கிறார்கள். இது ஆபத்தை விளைவிக்கும்.

போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் நல்ல பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இப்படி இருக்கும்போது சினிமாக்களில் போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்களாக நடிப்பவர்கள் ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது நிஜ போலீஸ்காரர்களும் இப்படி தான் இருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நினைக்க வைத்துவிடும். எனவே, சினிமாக்களில் போலீஸ்காரர்களின் கைகளில் ஆயுதங்கள் கொடுப்பதை இயக்குனர்கள் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story