தேசியகீதம் இசைத்தபோது எழுந்து நிற்காத 2 பெண்கள் உள்பட 4 பேர் தியேட்டரில் இருந்து வெளியேற்றம் கன்னட நடிகர், நடிகை ஆவேசத்தால் நடவடிக்கை


தேசியகீதம் இசைத்தபோது எழுந்து நிற்காத 2 பெண்கள் உள்பட 4 பேர் தியேட்டரில் இருந்து வெளியேற்றம் கன்னட நடிகர், நடிகை ஆவேசத்தால் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2019 12:19 AM GMT (Updated: 30 Oct 2019 12:19 AM GMT)

பெங்களூருவில் தேசியகீதம் இசைத்தபோது எழுந்து நிற்காத 2 பெண்கள் உள்பட 4 பேர் தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கன்னட நடிகர் மற்றும் நடிகையின் ஆவேசத்தால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூரு,

கன்னட திரைப்படங்களில் நடித்து வருபவர் அருண் கவுடா. நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா. இவர்கள் 2 பேர் உள்பட மேலும் சிலர் கடந்த 23-ந் தேதி பெங்களூரு சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்று நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்‘ படம் பார்த்தனர். இந்த வேளையில் தியேட்டரில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அப்போது தியேட்டரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் தேசியகீதத்துக்கு மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கவில்லை.

இதைப்பார்த்து கோபம் அடைந்த நடிகர் அருண் கவுடா, நடிகை ஐஸ்வர்யா உள்பட சிலர் அவர்கள் 4 பேரையும் சூழ்ந்து கொண்டு திட்டினார்கள். ‘52 வினாடிகள் இசைக்கப்படும் தேசியகீதத்துக்கு எழுந்து மரியாதை செய்யாமல் இருக்கிறீர்கள். நீங்கள் எதற்காக 3 மணிநேரம் ஓடும் படம் பார்க்க வந்தீர்கள். நீங்கள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளா?. நாட்டை பாதுகாக்க ராணுவவீரர்கள் எல்லையில் கால்கடுக்க நிற்கிறார்கள். ஆனால் நீங்கள் தேசியகீதத்துக்கு மரியாதை செய்ய எழுந்து நிற்க மாட்டீர்களா?‘ என்று கோபமாக கூறினார்கள்.

மேலும் அங்கு இருந்தவர்கள் அவர்கள் 4 பேரையும் தியேட்டரை விட்டு வெளியேறும்படி கூறினார்கள். இதையடுத்து அவர்கள் 4 பேரும் தியேட்டரில் இருந்து வெளியேறினார்கள். இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

Next Story