மக்களுக்கு வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை: சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும் - சித்தராமையா கணிப்பு


மக்களுக்கு வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை: சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும் - சித்தராமையா கணிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 6:02 AM IST (Updated: 30 Oct 2019 6:02 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும் என்று சித்த ராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா பெலகாவியில் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு பெலகாவி உள்பட வட கர்நாடகத்தில் உள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். இந்த பகுதிகளில் மாநில அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் மட்டுமே வழங்கியுள்ளது. வேறு எந்த நிவாரண பணிகளையும் அரசு செய்யவில்லை.

வீடுகளை இழந்த மக்கள் தெருவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதாக அரசு கூறியது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை. வெள்ளம் ஏற்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை. மாவட்ட பொறுப்பு மந்திரிகள் எங்கும் செல்லவில்லை. மக்களின் கஷ்டங்களை கேட்டு அறிந்து பிரச்சினைகளை தீர்க்கவில்லை.

சட்டசபை கூட்டத்தை மூன்றே நாட்களில் முடித்துவிட்டனர். நாங்கள் கேட்டோம், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கூட்டம் நடைபெறும் காலத்தை நீட்டிக்க முடியாது என்று அரசு சொன்னது. ஆனால் நிவாரண பணிகளை அரசு செய்யவில்லை. மாறாக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரிகள் மராட்டிய மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

15 தொகுதிகளுக்கு நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும். நான் மீண்டும் முதல்-மந்திரியாக கனவு காண்பதாக குமாரசாமி சொல்கிறார். நான் ஆட்சி அதிகாரத்தை அடைவதற்காக கனவு காண்பவன் கிடையாது. இடைத்தேர்தலுக்கு பிறகு இந்த அரசு கவிழும் என்று நான் சொன்னேன். இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று கூறினேன்.

ஆட்சியை கவிழ்ப்பேன் என்று நான் எங்கும் கூறியது இல்லை. ஆட்சியை கவிழ்ப்பது பற்றி எனக்கு தெரியாது. அது குமாரசாமிக்கு நன்றாக தெரியும். ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல உள்ளனர். அதனை தடுப்பதற்காக குமாரசாமி, பா.ஜனதாவை ஆதரிப்பதாக சொல்கிறார். 14 மாத கூட்டணி ஆட்சியில் சித்தராமையா தொல்லை கொடுத்தார் என்று குமாரசாமி கூறுகிறார்.

அவ்வாறு நான் தொல்லை கொடுத்திருந்தால் உடனே ராஜினாமா செய்துவிட்டு போயிருக்கலாமே. அரசியல் லாபத்திற்காக அவர் இப்படி குறை சொல்கிறார். கர்நாடகத்தில் மிக மோசமான அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். நாங்கள் இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அறிவித்ததும், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story