சுசீந்திரம் கோவிலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


சுசீந்திரம் கோவிலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 4:45 PM GMT)

சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்தவர் சுந்தரமோகன். இவருடைய மனைவி பேச்சிபானு(வயது 48). இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட நாகர்கோவில் அருகே இடலாக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

நேற்று முன்தினம் அவர் குடும்பத்துடன் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது, கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று கொண்டிருந்ததால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று பேச்சிபானு சாமி தரிசனம் செய்தார்.

 சங்கிலி பறிப்பு

பின்னர், அவர் கோவிலை விட்டு வெளியே வந்தார். அப்போது, தனது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, கோவிலில் சென்று தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி யாரோ தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.

 இதுகுறித்து பேச்சிபானு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும், கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story