நடத்தையில் சந்தேகம்: தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை - கணவர் கைது


நடத்தையில் சந்தேகம்: தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை - கணவர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2019 4:00 AM IST (Updated: 30 Oct 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தாலிக்கயிற்றால் பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோமணாம்பட்டி பெரிய கண்மாய் கரைப்பகுதியில் கடந்த 27-ந் தேதி பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த பெண்ணின் கையில் காளி-வீரக் குமார் என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. மேலும் ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீடு நம்பரும் கையில் எழுதப்பட்டிருந்தது. இதை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்த பெண், மதுரை கே.புதூரை சேர்ந்த மல்லிகா (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவருடைய கணவர் முத்துக்குமாரை (38) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மல்லிகாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட மல்லிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்தார். அப்போது மதுரை கே.புதூரை சேர்ந்த முத்துக் குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மல்லிகா முத்துக்குமாரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே மல்லிகாவின் நடத்தையில் முத்துக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கொலை செய்ய முத்துக்குமார் திட்டமிட்டார். இதையடுத்து மல்லிகாவை நத்தத்துக்கு முத்துக்குமார் அழைத்து வந்துள்ளார். பின்னர் கோமணாம்பட்டி கண்மாய் கரைக்கு அழைத்து சென்று தாலிக்கயிற்றால் மல்லிகாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story