திருப்பத்தூர் அருகே, கழிப்பறை இல்லாத பெண்கள் பள்ளிக்கு பூட்டுப்போட முயற்சி - பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்


திருப்பத்தூர் அருகே, கழிப்பறை இல்லாத பெண்கள் பள்ளிக்கு பூட்டுப்போட முயற்சி - பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 2019-10-30T23:25:46+05:30)

கழிப்பறை இல்லாத பெண்கள் பள்ளிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் பூட்டுப்போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் ஒன்றியம் மடவாளம் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி இதுவரை செய்யப்படவில்லை. இதனால் மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே பள்ளியில் கழிப்பறை வசதி செய்ய வேண்டும் என மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை கழிப்பறை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புதன்கிழமையன்று பள்ளியில் பூட்டுப்போட்டு போராட்டத்தை நடத்தப்போவதாக விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால் மழை காரணமாக புதன்கிழமையான நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

எனினும் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரன் தலைமையில் பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்துவதற்காக பள்ளிக்கு காலை 9 மணியளவில் வந்தனர்.

தகவல் அறிந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் (பொறுப்பு) தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்தனர். இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, பள்ளிக்கல்வி ஆய்வாளர் மோகன், தலைமைஆசிரியை நிர்மலாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரவி ஆகியோர் தலைமைஆசிரியர் அலுவலகத்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முதன்மை கல்வி அலுவலர் வந்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர் மார்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் காலை 11 மணியளவில் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அங்கு வந்தார். நல்லதம்பி எம்.எல்.ஏ.வும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.

அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமைஆசிரியை நிர்மலாதேவியிடம் மார்ஸ், கழிப்பறை கட்டுவதற்கு நீங்கள் ஏன் கல்வித்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜனிடம், மாணவிகளின் பெற்றோரிடம் நன்கொடை திரட்டி கல்வி நிர்வாகத்துக்கு அளித்து பொது நிதியுடன் சேர்த்து கழிப்பறை கட்ட முயற்சி செய்திருக்கலாமே என கேட்டார். அவர்கள் அதற்கு விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து கழிப்பறை கட்ட தேவையான நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணியை பொதுப்பணித்துறையினர் உடனடியாக தொடங்கினர். இதற்காக நிலம் அளவீட்டு பணிகளை முடித்து கட்டுமான பொருட்கள் வரவழைக்க நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கிக்கொடுப்பதாக நல்லதம்பி எம்.எல்.ஏ. கூறினார். 20 நாட்களுக்குள் கழிப்பறை கட்டும் பணி முடிவடையும் எனவும் அதுவரை ஆசிரியைகளுக்கான கழிப்பறையை மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகளை முதன்மை கல்வி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Next Story