இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி


இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
x
தினத்தந்தி 30 Oct 2019 10:45 PM GMT (Updated: 2019-10-31T00:09:33+05:30)

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வினரிடையே எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

தேவர் குருபூஜையை யொட்டி சிவகாசி பகுதியில் உள்ள தேவர் சிலைகளுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்–அமைச்சரையும், துணை முதல்–அமைச்சரையும் தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார். அவரது நாடகம் இனி எடுபடாது. ஸ்டாலின் தற்போது ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். சிறந்த அரசியல் தலைவராக வலம் வரும் முதல்–அமைச்சரின் வளர்ச்சியை பொருக்கமுடியாத ஸ்டாலின் கண்டபடி பேசி வருகிறார்.

நடுக்காட்டுப்பட்டி சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தவுடன் அந்த பகுதிக்கு சென்று அமைச்சர்குழுவினர் சிறுவனை மீட்க தேவையான நடவடிக்கையை எடுத்தனர். இந்த சம்பவத்தை உலகின் பல்வேறு பகுதியில் உள்ள தமிழர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் மட்டும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை குறை சொல்லி வருகிறார். தாமிரபரணி ஆற்றில் எத்தனைபேரை மூழ்கடித்தனர் என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டார்.

 விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கி உள்ளது. அதே நேரத்தில் தி.மு.க.வினர் மத்தியில் ஒருவித சோர்வை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர தி.மு.க.வில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க. உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். வழக்கம் போல் தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டணி தொடரும் என முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் கூறி உள்ளனர். ஆவின் பால் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வழக்கத்தை விட ஆவின்பொருட்கள் விற்பனை கூடுதலாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சுடர்வள்ளி சசிக்குமார், வேண்டுராயபுரம் காளிமுத்து, ஆனையூர் ராஜசேகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லயன் லட்சுமிநாராயணன். யுவராஜ், கார்த்திக், செல்லப்பாண்டி, ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story