நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: சென்னை மாணவர்கள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் தந்தையரின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: சென்னை மாணவர்கள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் தந்தையரின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2019 11:30 PM GMT (Updated: 30 Oct 2019 6:39 PM GMT)

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான சென்னை மாணவர்கள் 2 பேருக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர்களின் தந்தையரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரை,

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ படிப்பில் மாணவர்கள் சிலர் சேர்ந்ததாக எழுந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த மாணவர் பிரவீன், அவருடைய தந்தை சரவணன் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இதேபோல சென்னை அயனாவரத்தை சேர்ந்த டேவிஸ், அவருடைய மகனான மாணவர் ராகுல் ஆகியோரும் ஜாமீன் கேட்டு மனு தனியாக தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், ‘‘மனுதாரர்களில் பிரவீன், ராகுல் ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே உதித்சூர்யாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை இவர்களுக்கும் பொருந்தும். அதேபோல சரவணன், டேவிஸ் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ரவிக்குமார், அவருடைய மகன் ரிஷிக்காந்த் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை வருகிற 6–ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

Next Story