மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டி உள்ளது.
நெல்லை,
வடகிழக்கு பருவமழையால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் அதிகபட்சமாக 141 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 113.55 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி 120.20 அடியாக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 6.65 அடி உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 53 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 354.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 126.05 அடியாக இருந்தது. நேற்று காலை 135.17 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 9.12 அடி உயர்ந்து உள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 50.10 அடியாக இருந்தது. நேற்று 3.90 அடி உயர்ந்து 54 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,803 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
நெல்லை மாவட்ட அணைப்பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்- 141, சேர்வலாறு-117, மணிமுத்தாறு- 136.8, கடனா- 33, ராமநதி- 70, கருப்பாநதி- 28, குண்டாறு- 17, நம்பியாறு- 86, கொடுமுடியாறு- 55, அடவிநயினார்- 25.
Related Tags :
Next Story