கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட, மாவோயிஸ்டு முக்கிய தலைவன் 30 ஆண்டாக இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்தவர்
கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு இயக்க முக்கிய தலைவன் 30 ஆண்டாக இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்தவர் என்பதும், அவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் சென்று தலைமறைவானவர் என்பதும் அம்பலமாகி உள்ளது.
கோவை,
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மஞ்சக்கண்டி அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் ரகசிய கூட்டம் நடத்தினார்கள். இது குறித்து தகவல் அறிந்த கேரள மாநில தண்டர்போல்டு என்ற சிறப்பு அதிரடிப்படை போலீசார் கடந்த 28-ந் தேதி அங்கு விரைந்தனர். அங்குள்ள சாலையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மாவோயிஸ்டுகள் கூட்டத்தை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவர்களை சரண் அடையும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் சரண் அடையாமல் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். இதையடுத்து போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்டு இயக்கத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கார்த்திக், கர்நாடகாவை சேர்ந்த சுரேஷ், ஸ்ரீமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
குண்டு காயங்களுடன் சோனா மற்றும் மாவோயிஸ்டு முக்கிய தலைவனான மணிவாசகம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி, சந்துரு என்கிற தீபக் ஆகியோர் தப்பிச்சென்றனர். அங்கு தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் பலியானவர்களின் உடலை வனப்பகுதியை விட்டு வெளியே கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவோயிஸ்டுகள் திடீரென்று போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் திரும்ப சுட்டதால் மாவோயிஸ்டு முக்கிய தலைவன் மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார். குண்டு காயங்களுடன் லட்சுமி, தீபக் ஆகியோர் தப்பிச்சென்றனர். ஆனாலும் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், செல்போன்கள் மற்றும் சில பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் மழை குறைந்ததால், சுட்டுக்கொல்லப்பட்ட 4 மாவோயிஸ்டுகளின் உடல்களை போலீசார் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அந்த உடல்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக பலத்த பாதுகாப்புடன் நேற்று அதிகாலை திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
இதையொட்டி அங்கு பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவா விக்ரம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதுபோன்று அங்கு துப்பாக்கி ஏந்திய தண்டர்போல்டு என்ற சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிவாசகத்தின் சகோதரி லட்சுமி, அவருடைய கணவர் செல்வகண்ணன் மற்றும் உறவினர்கள், கார்த்திக்கின் தாய் மீனா, சகோதரி வாசுகி மற்றும் பலர் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். அப்போது, மணிவாசகத்தை போலீசார் எதற்காக சுட்டுக்கொன்றனர் என்ற காரணம் தெரியாமல் அவரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரின் சகோதரி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு இயக்க முக்கிய தலைவன் மணி என்கிற மணிவாசகம் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கு வயது 56. சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி அருகே உள்ள ராமமூர்த்திநகர் தான் அவரின் சொந்த ஊர். மாவோயிஸ்டு இயக்கத்தில் சிறுவாணி தள பிரிவின் தலைவராக குப்பு தேவராஜ் இருந்தார். அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் மணிவாசகம் தலைவர் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார்.
அவர், தர்மபுரியில் உள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவர். அவர், படிக்கும்போதே மாவோயிஸ்டு கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டு உறுப்பினராக சேர்ந்தார். மேலும் அவர் பல்வேறு இடங்களில் ஆயுதப்பயிற்சியும் பெற்றார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டு தீவிரவாதியான பாலனிடம் நெருங்கிய நண்பராகி மணிவாசகம் ஆயுதப்பயிற்சி பெற்று உள்ளார். கடந்த 1991-ம் ஆண்டு சேலத்தில் ரகசிய கூட்டம் நடத்தியதாக சேலம் டவுன் போலீசார் மணிவாசகம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதுபோன்று கடந்த 2001-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மடிக்கோன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட செம்மணகள்ளி என்ற பகுதியில் நக்சலைட்டு நடத்திய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உள்ளார். அப்போது சந்திரா என்ற நக்சலைட்டை போலீசார் கைது செய்தனர். ஆனால் மணிவாசகம் தலைமறைவானார்.
அவர், கடந்த 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சாலைஜோகிபட்டியில் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து உள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு கியூ பிரிவு போலீசார் மீண்டும் மணிவாசகத்தை கைது செய்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்ததும் மணிவாசகம் தலைமறைவானார்.
அவர் ஏ.கே.-47 உள்பட பல்வேறு ரக துப்பாக்கிகளை கையாளுவதிலும், குறிபார்த்து சுடுவதிலும், மலை ஏறுவதிலும் தேர்ச்சி பெற்றவர். அவர், மாவோயிஸ்டு இயக்கத்தில் மலையோர கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்களை மூளைச்சலவை செய்து சேர்த்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆயுதப்பயிற்சி கொடுத்து உள்ளார். எனவே அவர் யாருக்கு எல்லாம் பயிற்சி கொடுத்து இருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கிடையே பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவா விக்ரம் நிருபர்களிடம் கூறும்போது, துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் ஒரு ஏ.கே.-47 ரக துப்பாக்கி, 303 ரக துப்பாக்கி, 5 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது என்கவுன்ட்டர் இல்லை. வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி சுட்டதால்தான் தற்காப்புக்காக போலீசாரும் திரும்பி சுட்டனர் என்றார்.
Related Tags :
Next Story