தொடர் உண்ணாவிரதம்: முருகனை, தனிமைச்சிறையில் இருந்து மாற்ற வேண்டும் - ஐகோர்ட்டில் மனுதாக்கல்


தொடர் உண்ணாவிரதம்: முருகனை, தனிமைச்சிறையில் இருந்து மாற்ற வேண்டும் - ஐகோர்ட்டில் மனுதாக்கல்
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 31 Oct 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் கைப்பற்றப்பட்டதால் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை, அங்கிருந்து வழக்கமான அறைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வக்கீல் தெரிவித்தார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்தசில நாட்களுக்கு முன்பு செல்போன் கைப்பற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவருக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் 15 நாட்களுக்கு ஒருமுறை பெண்கள் சிறையில் நளினியை சந்தித்து பேசிவருகிறார். செல்போன் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சந்திப்புக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் முருகன் வழக்கமான அறையில் இருந்து தனிமை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து முருகன் கடந்த 18-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நளினி 27-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருக்கிறார். அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களுடைய உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னை தனிமைச்சிறையில் இருந்து வழக்கமான அறைக்கு மாற்றக்கோரி முருகன், வழக்கறிஞர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

முருகனின் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு, அதிகாரிகள் இடையூறு செய்துவருகிறார்கள். இதனால் முருகன் மனதளவில் பாதிக்கப்பட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதம் இருக்கிறார்.

இதனால் அவர்களுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் விதிமுறைகளை மீறி முருகனை 24 மணிநேரமும் தனிமைச்சிறையில் அடைத்துள்ளனர். எனவே அவரை தனிமைச்சிறையில் இருந்து, வழக்கமான அறைக்கு மாற்றக்கோரியும், ரத்து செய்யப்பட்ட சிறை சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரியும், நளினியை சந்திக்க அனுமதிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் இன்று (நேற்று) மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story