உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி தொடரும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி தொடரும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 8:14 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி தொடரும் என முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் கூறினார்.

வாலாஜா, 

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த மருதாலம் கிராமத்தில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற அன்புமணி தம்பி, தங்கை, மக்கள் படை ஆகிய முப்படைகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ம.க.இளைஞர் சங்க தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் வாலாஜா அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித்வில்சன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மீட்பு பணிக்கு பேரிடர் ஆணையம் நவீன எந்திரங்களை உருவாக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் ஆழ்துளைக்கிணறுகளை மூடுவது பற்றி பல தீர்ப்புகளை வழங்கியும் அதன் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகளை சரியாக மூடி பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டு உள்ளதால் சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும், பா.ம.க.வை பொருத்தவரை நீட் தேர்வு என்பது தேவையற்றது. டிசம்பர் 18-ந் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளான காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை கட்டும் விவகாரம், மீத்தேன் திட்டம் உள்பட அனைத்து பிரச்சினைகளிலும் தமிழகத்தின் நலன் காக்க குரல் எழுப்பப்படும்.

உள்ளாட்சி தேர்தல் 2 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார். அப்போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story