நாங்குநேரி சுங்கச்சாவடியில் படுமோசமான சாலை சீரமைக்கப்படுமா? - வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள படுமோசமான சாலை சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நெல்லை,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்தை நவீனப்படுத்துவதற்கும், வாகனங்கள் வேகமாக விபத்துகள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் மற்றொரு இடத்திற்கு போய் சேர வேண்டும் என்பதற்காக தான் 4 வழிச்சாலை, 6 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த சாலைகளை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்காகவும், தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்கவும், சுங்கச்சாவடிகள் அமைத்து, அந்த வழியாக செல்கின்ற 4 சக்கர வாகனங்களில் கட்டணம் வசூல் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 500-க்கும் மேற்பட்ட சுங்க கட்டணம் வசூல் செய்யும் சுங்கச்சாவடிகள் (டோல்கேட்) உள்ளன.
தமிழகத்தில் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. நெல்லையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாங்குநேரியில் ஒரு சுங்கச்சாவடி உள்ளது. இது கடந்த 2007-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சுங்கச்சாவடியில் உள்ள சாலை மறுசீரமைப்பு செய்யப்படாததால் படுமோசமாக குண்டும், குழியுமான நிலையில் உள்ளது. சுங்கச்சாவடியில் உள்ள பிளாட்பாரங்களில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. அங்குள்ள சுவர்களில் புகை மற்றும் ஆயில் படிந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த சுங்கச்சாவடியின் அருகில் பல்லாங்குழிபோல் உள்ள சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் அங்குள்ள நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் ரோடுகள் மோசமாக உள்ளன. பூங்கா செடிகள் முறையாக வளர்க்கப்படவில்லை.
இதுகுறித்து ராணிபேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் சரணவன் கூறுகையில், “சுங்கச்சாவடிகள் அதிகமாக இருப்பது தமிழகத்தில் தான். இங்கு தான் சாலை பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. நாங்குநேரி சுங்கச்சாவடி முன்பே ரோடு குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இங்கு வசூல் செய்கின்ற பணத்தை வைத்து இந்த சாலையை சீரமைத்ததாலே போதும், சாலை நன்றாக இருக்கும். இந்த சுங்கச்சாவடியால் டிரைவர்களுக்கு பெரும் மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது“ என்றார்.
களக்காட்டை சேர்ந்த லாரி டிரைவர் மணி கூறுகையில், “தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளது. டிரைவர்கள் வேண்டா வெறுப்பாக தான் சுங்கச்சாவடியில் பணத்தை செலுத்திவிட்டு வாகனங்களை நெடுஞ்சாலைகளில் ஓட்டி வருகிறார்கள். ரூ.450, ரூ.625, ரூ.680 என கட்டணங்களை செலுத்தினாலும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. நாங்குநேரி சுங்கச்சாவடி முன்பு ரோடு பல்லாங்குழிபோல் உள்ளது. தற்போது மழை பெய்வதால் இங்குள்ள சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இங்கு வசூல் செய்கின்ற பணத்தை வைத்தாவது, இந்த சாலையை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த சுங்கச்சாவடியை இங்கிருந்து அகற்றிவிட வேண்டும்“ என்றார்.
இதுகுறித்து நாங்குநேரி சுங்கச்சாவடியில் இருப்பவர்களிடம் கேட்டபோது, “இது எங்களுடைய வேலை இல்லை. இதற்கு தனியாக என்ஜினீயர் உள்ளார். அவர் தான் பதில் சொல்ல வேண்டும். எங்களுக்கு பணம் வசூல் செய்கின்ற வேலை மட்டும்தான்“ என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புத்துறை என்ஜினீயரிடம் கேட்டதற்கு, “நாங்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்து வருகிறோம். நாங்குநேரி சுங்கச்சாவடி அருகில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க உள்ளோம். பிளாட்பாரங்களில் உள்ள சாலையில் காங்கிரீட் அமைக்க உள்ளோம். இந்த பணியை விரைவில் மேற்கொள்ள உள்ளோம்“ என்றார்.
Related Tags :
Next Story