தியாகிகளின் வாரிசுகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


தியாகிகளின் வாரிசுகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 31 Oct 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

தியாகிகளின் வாரிசுகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்ப ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வாரிசு தாரர்களுக்கு அடையாள அட்டை, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, சுய தொழில் தொடங்குவதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 25 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இட ஒதுக்கீடு

கூட்டத்தில் தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் இயக்க தலைவர் சுந்தரவிமல்நாதன் பேசியதாவது:-

விடுதலைப்போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும். அவர்களின் குறைகளை தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய விடுதலைக் காக உயிர் துறந்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

காந்தியடிகளின் 150-வது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில் அவரை போற்றும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள நகர்களில் சிறுவர் பூங்காக்களுக்கு காந்தி சிறுவர் பூங்கா என பெயரிட வேண்டும். விடுதலைப்போராட்ட வீரர்கள் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அடையாள அட்டை

இந்திய தேசிய ராணுவ பேரவை வாரிசமைப்பு மாநில தலைவர் வேல்சாமி:- தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை உள்ள சாலைகளுக்கு நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் பெயரை சூட்ட வேண்டும். விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு நாமக்கல் கலெக்டர் வழங்கியது போல வாரிசு அடையாள அட்டை வழங்க வேண்டும். தமிழக அரசு தியாகிகளுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கி வந்துள்ளது. இந்த சலுகை பெரும்பாலான தியாகிகளுக்கு கிடைக்கவில்லை. நிலம் கிடைக்கப்பெறாத தியாகியின் குடும்பத்திற்கு, அவர்களின் மனைவி மற்றும் தியாகிகளின் சட்டப்பூர்வ வாரிசுகளான மகனோ, மகளோ பயன்பெறக்கூடிய வகையில் அரசு வழங்கி வரும் சலுகையில் திருத்தம் செய்து ஆணையிட வேண்டும். தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசு பஸ் நிலையம், மாநகராட்சி வணிக வளாகங்கள், அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story