நெல்லையில் கோஷ்டி மோதலில் காயமடைந்த பெண் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


நெல்லையில் கோஷ்டி மோதலில் காயமடைந்த பெண் சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Oct 2019 10:30 PM GMT (Updated: 30 Oct 2019 8:25 PM GMT)

நெல்லையில் கோஷ்டி மோதலில் காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார். அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை, 

நெல்லை வடக்கு புறவழிச்சாலை அருகே உள்ள மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி முருகலட்சுமி (வயது 45). இவர்களது குடும்பத்துக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாமணி என்பவர் குடும்பத்துக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்தது. சமீபத்தில் சாக்கடை தண்ணீர் செல்வது தொடர்பாக இரு குடும்பத்துக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி இரு குடும்பத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ராஜாமணியின் மகன்கள் பரமசிவம், செல்வம், ஈஸ்வரன், ரத்தினம் மற்றும் உறவினர்கள் முத்துச்செல்வம், மதன் ஆகியோர் சேர்ந்து, சுப்பிரமணியன், அவருடைய மனைவி முருகலட்சுமி, மகன் ஆரோக்கியராஜ் ஆகியோரை தாக்கினர்.

இதேபோல் சுப்பிரமணியன், அவருடைய மனைவி முருகலட்சுமி, மகன்கள் ஆரோக்கியராஜ், அந்தோணி ராஜ், மூர்த்தி, இசக்கிராஜா ஆகிய 6 பேர் சேர்ந்து ராஜாமணி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கினர். இந்த மோதலில் படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

முருகலட்சுமிக்கு சமீபத்தில் வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்தது. கோஷ்டி மோதலின்போது முருகலட்சுமியின் வயிற்றில் மிதித்து தாக்கியதால் உடல்நிலை மோசமானது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். முருகலட்சுமி மகன் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் எதிர்தரப்பை சேர்ந்த 6 பேர் மீதும், ராஜாமணி மகன் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியன் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முருகலட்சுமி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை வழக்கு தொடர்பாக பரமசிவம், செல்வம், ஈஸ்வரன், ரத்தினம், முத்துச்செல்வம், மதன் ஆகிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story