மணப்பாறை அருகே சுஜித் இறந்த இடத்தில் பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி


மணப்பாறை அருகே சுஜித் இறந்த இடத்தில் பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 8:36 PM GMT)

மணப்பாறை அருகே சுஜித் இறந்த இடத்தில் பொதுமக்கள் திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது இளைய மகன் சுஜித் வில்சன்(வயது 2). கடந்த 25-ந் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜித், அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். குழந்தையை உயிருடன் மீட்பதற்கான பணிகள் 5 நாட்களாக இரவு-பகலாக நடைபெற்றும் நேற்று முன்தினம் அதிகாலை அந்த குழந்தையை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

பின்னர் அக்குழந்தையின் உடல் உடனே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றைய தினமே பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த அந்த குழந்தையின் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 2-வது நாளான நேற்று குழந்தை அடக்கம் செய்யப்பட்ட இடம் மற்றும் அக்குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு ஆகியவற்றை பொதுமக்கள் சாரை, சாரையாக வந்து பார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். பின்னர், குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு வீட்டின் முன் வைக்கப்பட்டு உள்ள சுஜித்தின் உருவ படத்திற்கும் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லாவும் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தை உயிரிழந்த ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டார். பின்னர், குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர் நிருபர்களிடம் கூறுகையில், இதுபோன்ற ஒரு சம்பவம் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகத்தில் எந்த இடத்திலும் நடக்கக் கூடாது. சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் விஞ்ஞானிகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற போதிய கருவிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை வகுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதனை யாரும் பின்பற்றுவதில்லை. குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.

நடிகர் மயில்சாமி

குழந்தை சுஜித்தின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின் நடிகர் மயில்சாமி கூறுகையில், குழந்தையை மீட்க 5 நாட்களாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து மீட்பு குழுவினர் போராடினர். இதுபோன்ற சம்பவம் நேற்று இன்று நடைபெறவில்லை. காலம், காலமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவம் நடந்தால் மீட்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லக்கூடாது, நாமும் நம் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Next Story