அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி பெண் டாக்டர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் டாக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மருத்துவமனையில் இ.சி.ஜி. பிரிவில் ஊழியராக வேலை செய்பவர் ஐயாலு. இவர் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தம்பி ராஜா பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார். அவருக்கு வேலை தேடி வந்தோம். சென்னை பூந்தமல்லி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் சண்முகவள்ளி (வயது 47) என்பவர் எனது தம்பிக்கு தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக சொன்னார். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கேட்டார். நாங்களும் ரூ.3 லட்சம் பணம் கொடுத்தோம். சண்முகவள்ளியின் ஏற்பாட்டின் பேரில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த நந்தகோபால், கானாத்தூரை சேர்ந்த ஏழுமலை பெஞ்சமீன் ஆகியோர் சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தனர். இதேபோல் சென்னை வானகரத்தை சேர்ந்த லட்சாவதி என்ற பெண்ணுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கினார்கள்.
போலி அரசாணை
இந்தநிலையில் எனது தம்பிக்கு தலைமை செயலகத்தில் உதவியாளர் வேலை கிடைத்தது போல் போலியான அரசாணை ஒன்றை தயார் செய்து கொடுத்தனர். லட்சாவதி என்ற பெண்ணுக்கும் அதேபோல் போலி அரசாணை தயாரித்து கொடுத்தனர். போலி அரசாணையை சிவசக்தி மாடசாமி என்பவர் தனது அச்சகத்தில் தயாரித்து கொடுத்து உள்ளார். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் இதுபோல போலி அரசாணை கொடுத்து நிறைய பேரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த மோசடி கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
4 பேர் கைது
இந்த புகார் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து, பெண் டாக்டர் சண்முகவள்ளி, நந்தகோபால், ஏழுமலை பெஞ்சமீன் மற்றும் சிவசக்தி மாடசாமி ஆகிய 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story