மாவட்ட செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 11-ந் தேதி நடக்கிறது + "||" + Unnishekham takes place at the Gangaikonda Cholapuram Brihadeshwara temple

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 11-ந் தேதி நடக்கிறது

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் 11-ந் தேதி நடக்கிறது
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போர் நடத்தி வெற்றி பெற்றதன் சின்னமாக கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இக்கோவில் புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. இங்குள்ள சிவலிங்கம் ஒரே கல்லில் 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்டு கம்பீரமாக காட்சி அளிக்கிறது.


இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 100 மூட்டை பச்சரிசியை நீராவி அடுப்புகளில் சாதம் வடித்து நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூலம் கூடை, கூடையாக சாதத்தை சுமந்து சென்று சிவலிங்கத்திற்கு சாத்தப்பட உள்ளது.

கோடிக்கணக்கான சிவலிங்கத்தை...

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சிவலிங்கத்திற்கு சாதம் சாத்தப்படும். சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் சிவலிங்கத்தின் தன்மை பெறுகிறது. இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும்.

பக்தர்களுக்கு பிரசாதம்

இந்த கோவிலில் படைக்கப்படும் அன்னாபிஷேகம் பக்தர்களுக்கு பிரசாதமாக இரவு 9 மணிக்கு வழங்கப் படும். மீதம் உள்ள சாதம் அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் தலைமையில் அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.