ஆழ்துளை கிணற்றில் தவறி விழுபவர்களை மீட்க வெளிநாடுகளில் இருந்து நவீன கருவிகள் வாங்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுபவர்களை மீட்க வெளிநாடுகளில் இருந்து நவீன கருவிகள் வாங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி,
தமிழகத்தில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் அனைத்து குளங்களும், கண்மாய்களும், நீர்வரத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டதால், தற்போது பெய்த மழையில் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி உள்ளது.
மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கூடுதலாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். மழை வெள்ளத்தால் எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அங்கு உடனே மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு குழுவினர் தயாராக உள்ளனர்.
தமிழகத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மூடப்படாத ஆழ்துளை கிணறுகளின் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுபவர்களை மீட்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து நவீன கருவிகள் வாங்கப்படும். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Related Tags :
Next Story