விளாத்திகுளம் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடி மேல தெருவைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவருடைய மனைவி மாரித்தாய் (வயது 40). இவர்களுக்கு விக்னேஷ்குமார் (18), பாலச்சந்திரன் (14) ஆகிய 2 மகன்களும், மகாலட்சுமி (16) என்ற மகளும் இருந்தனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் விக்னேஷ்குமார் பிளஸ்-2 வும், மகாலட்சுமி பிளஸ்-1ம், பாலச்சந்திரன் 9-ம் வகுப்பும் படித்தனர். சங்கரசுப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாரித்தாய் கூலி வேலைக்கு சென்று, தன்னுடைய குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சூரங்குடி பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் அப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து பாலச்சந்திரன் அங்குள்ள தெருக்குழாயில் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து வர திட்டமிட்டான். இதற்காக அவன், பக்கத்து வீட்டில், இரும்பால் செய்யப்பட்ட தள்ளுவண்டியை எடுத்து வர சென்றான். இதற்கிடையே அப்பகுதியில் மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது. அப்போது மின்கசிவு காரணமாக தள்ளுவண்டியில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதனால் தள்ளுவண்டியை எடுக்க சென்ற பாலச்சந்திரன் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாலச்சந்திரன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தான். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவனை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பாலச்சந்திரனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story