தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள, ஆழ்துளை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள, ஆழ்துளை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 11:42 PM GMT)

தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 7 ஆண்டுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிர் தப்பிய சிறுவன் குணா கூறினான்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கும்லத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். விவசாயி. இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு பூஜா என்ற மகளும், குணா என்ற மகனும் உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி ஆனந்தன், தனது மனைவி பத்மா உடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அவரது 3 வயது மகன் குணா, தனது சகோதரி பூஜாவுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஆனந்தனின் தோட்டத்தில் அமைக்கப் பட்டிருந்த 520 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் குணா தவறி விழுந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி பூஜா பெற்றோரிடம் தெரிவித்தாள். உடனடியாக அவர்கள் தேன்கனிக்கோட்டை தாசில்தார், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து 520 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 30 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தை குணாவை மீட்கும் பணி நடந்தது. காலை 10 மணிக்கு விழுந்த சிறுவனை மாலை 4 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தற்போது குணா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து அவனை மீட்கும் பணிகள் டி.வி.யில் ஒளிபரப்பானதை குணாவின் பெற்றோர் பார்த்தனர். அவர்கள் குணாவிடம் நீயும், இதை போல ஆழ்துளை கிணற்றில் விழுந்து கடவுள் அருளால் உயிர் பிழைத்தாய் என கூறினார்கள். அன்று முதல் சிறுவன் சுஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என்று குணா கடவுளை வேண்டி வந்தான். குழந்தை சுஜித் மரணம் அடைந்த செய்தி கேட்டு குணா மிகுந்த அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு அழுதான்.

7 ஆண்டுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிர் தப்பிய சிறுவன் குணா கூறுகையில், என்னை போல சுஜித்தும் கடவுள் அருளால் உயிர் பிழைப்பான் என நம்பினேன். ஆனால் அவன் இறந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இந்த ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குணா கூறினான்.

Next Story