கம்பம் அருகே, ஓடையை ஆக்கிரமித்த செடிகள் அகற்றம்
கம்பம் அருகே கேசவபுரம் கண்மாய்க்கு செல்லும் கூத்தனாட்சி ஓடையை ஆக்கிரமித்த செடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
கம்பம்,
கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி மற்றும் காமயகவுண்டன்பட்டி ஊர்களுக்கு இடையே கேசவபுரம் கண்மாய் உள்ளது. பரந்து விரிந்த இந்த கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயை நம்பி ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழைக்காலங்களில் மேகமலை வனப்பகுதியில் பெய்யும் மழைநீர், கூத்தனாட்சி ஓடை வழியாக கேசவபுரம் கண்மாயை வந்தடைகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேகமலை வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கூத்தனாட்சி ஓடையில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஓடையில் செடி, கொடிகள் மற்றும் புதர்மண்டி உள்ளதால் கேசவபுரம் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓடையில் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்கள் மற்றும் சாலை வழியாக தண்ணீர் வீணாகி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே ஓடையில் நீர்வரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி கண்மாய்க்கு தண்ணீர் சீராக வந்து சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இதுதொடர்பாக கம்பம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜனிடம் புகார் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூத்தனாட்சி ஓடையில் ஆக்கிரமித்து இருந்த செடி, கொடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story