மதுரை அருகே பயங்கரம்: சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் டீக்கடைக்காரர் சாவு - காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை


மதுரை அருகே பயங்கரம்: சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் டீக்கடைக்காரர் சாவு - காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 1 Nov 2019 4:30 AM IST (Updated: 31 Oct 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து டீக்கடைக்காரர் தன்னுடைய 2 மகள்களுடன் உயிரிழந்தார். இந்த பயங்கர சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்படடி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 35). டீக்கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு பிரதீபா (7), ஹேமலதா (5) என்ற 2 மகள்கள்.

இந்த நிலையில் கீதாவின் நடத்தையில் கருப்பையா சந்தேகம் அடைந்ததால் சமீப காலமாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. பின்னர் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்று, உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கீதா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கருப்பையா தனது 2 மகள்களுடன் தொட்டப்பநாயக்கனூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது மகள்களுடன் டீக்கடையில் கருப்பையா வழக்கம்போல் பணியை கவனித் தார். அப்போது திடீரென்று அங்கிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

அக்கம்பக்கத்தினர் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர். டீக்கடை பலத்த சேதம் அடைந்ததுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டு கிடந்தன. அந்த இடமே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. சம்பவ இடத்தில் கருப்பையாவும், அவருடைய மூத்த மகள் பிரதீபாவும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர்.

பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு மகள் ஹேமலதாவை மீட்டு, உடனடியாக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் அவளை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சற்று நேரத்தில் ஹேமலதாவும் பரிதாபமாக உயிரிழந்ததால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3- ஆனது.

இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த உசிலம்பட்டி தீயணைப்பு படையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். கருப்பையா, பிரதீபா ஆகியோரின் உடல்கள் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி பிரிந்து சென்றதால் மனவருத்தத்தில் இருந்த கருப்பையா கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து, தனது 2 மகள்களுடன் இந்த துயர முடிவை தேடிக்கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதே நேரத்தில் சிலிண்டர் வெடித்ததற்கு வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story