ஈரானில் சிக்கி தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் - கலெக்டரிடம் இன்பதுரை எம்.எல்.ஏ., குடும்பத்தினர் மனு


ஈரானில் சிக்கி தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் - கலெக்டரிடம் இன்பதுரை எம்.எல்.ஏ., குடும்பத்தினர் மனு
x
தினத்தந்தி 31 Oct 2019 10:45 PM GMT (Updated: 31 Oct 2019 6:10 PM GMT)

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம் இன்பதுரை எம்.எல்.ஏ. மற்றும் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூட்டப்புளியை சேர்ந்த இருதயராஜ் மனைவி ஷர்மிளா. இவருடைய குடும்பத்தினர் மற்றும் இன்பதுரை எம்.எல்.ஏ. ஆகியோர் நெல்லை கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நாங்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகிறோம். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் இருதயராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியை சேர்ந்த பிரதீப், கிரீட்வின் ஆகியோர் சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்வதற்காக சென்றனர். சவுதி அரேபியாவில் அப்துல் ஜலால் என்பவருக்கு சொந்தமான படகில் அவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் 3 பேரும் மீன்பிடிக்க சென்றுள்ளனர், அதன்பிறகு அவர்கள் கரை திரும்பவில்லை.

சவுதி அரேபியா கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் சூறாவளியால் அவர்களது படகு வழிதவறி சென்றபோது ஈரான் கடற்படையினரிடம் சிக்கிக் கொண்டனர்.

தற்போது அவர்கள் 3 பேரும் ஈரான் நாட்டு கடற்படை பிடியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் எங்களுடைய குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளோம்.

எனவே கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு ஈரான் நாட்டு கடற்படையிடம் சிக்கி தவிக்கும் 3 பேரையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அப்போது, ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா, அ.தி.மு.க. மாவட்ட மீனவர் அணி செயலாளர் அகிலன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story