தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கனிமொழி எம்.பி. ஆய்வு
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கனிமொழி எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை 2-வது நாளாக கனிமொழி எம்.பி நேற்று ஆய்வு செய்தார். அவர் மீளவிட்டான் ரோடு பகுதியில் வாய்க்காலில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து வி.எம்.எஸ்.நகர், சின்னகண்ணுபுரம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து இருப்பதை பார்வையிட்டார். மழைநீரில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக கனிமொழி எம்.பி தருவைகுளத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
புயல் எச்சரிக்கைக்கு முன்பு மீன்பிடிக்க 4 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் நிலை குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடமும் பேசினேன். தற்போது 3 படகுகளில் உள்ள மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். மற்றொரு படகில் உள்ள மீனவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story