7-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு: வாயில் கருப்புத்துணி கட்டி டாக்டர்கள் தர்ணா


7-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு: வாயில் கருப்புத்துணி கட்டி டாக்டர்கள் தர்ணா
x
தினத்தந்தி 1 Nov 2019 4:30 AM IST (Updated: 1 Nov 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 7-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 7-வது நாளாக இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மாணவர்கள்

இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்ராம் தலைமை தாங்கினார். இதில் பயிற்சி டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு டாக்டர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும்.

அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வாயில் கருப்புத்துணி

டாக்டர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி பங்கேற்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), நீலமேகம் (தஞ்சை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

கும்பகோணம்

டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒரு சில டாக்டர்கள் மட்டும் தான் பணிக்கு வருகின்றனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. ஆதலால் அரசு மருத்துவமனைக்கு அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இங்கு ஒரு சில டாக்டர்கள் மட்டும் இருப்பதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கிடையே தள்ளு-முள்ளு ஏற்படுகிறது.

Next Story