வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் - கலெக்டர் தகவல்


வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Nov 2019 3:45 AM IST (Updated: 1 Nov 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை பொறியியல் துறை மூலம் வட்டார அளவில் 15 வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைப்பதற்கு அரசு மானியம் வழங்கப்படவுள்ளது என கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்,

சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இவ்வாறான மையங்களை அமைத்திட முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் முன்வரலாம். வாடகை மையங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அந்தந்த பகுதிகளில் சாகுபடியாகும் பயிர்கள், மண்ணின் தன்மை, வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு மையங்களை நடத்த முன்வருபவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

மையங்களை அமைக்க முன்வருபவர்கள் வேளாண்மை பொறியியல் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் எந்திரங்களிலிருந்து தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். மையங்களை அமைத்திட விரும்புவோர் முதலில் அதற்குரிய விண்ணப்பத்தினை மாவட்டத்தின் வருவாய் கோட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.

மொத்த மானிய தொகையில் பொதுப்பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதி திராவிட பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதி கணக்கில் 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதி தொகை பயனாளியின் சேமிப்பு வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை அவரது வங்கி கணக்கில் திரும்ப வழங்கப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் மாவட்டத்திற்கு 15 வாடகை மையங்கள் அமைத்திட ரூ.1½ கோடி மானியத் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story