சமூக வலைதளங்களில் தாராபுரம் நீதித்துறை பற்றி அவதூறான கருத்து - போலீசில் வக்கீல்கள் புகார்


சமூக வலைதளங்களில் தாராபுரம் நீதித்துறை பற்றி அவதூறான கருத்து - போலீசில் வக்கீல்கள் புகார்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 7:38 PM GMT)

சமூக வலைதளங்களில் தாராபுரம் நீதித்துறையை பற்றி அவதூறான கருத்துகள் வெளியாகி வருவது தொடர்பாக தாராபுரம் போலீசில் வக்கீல்கள் புகார் அளித்தனர்.

தாராபுரம், 

தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் நீதியைத்தேடி என்கிற பெயரில் நீதித்துறை பற்றியும், வக்கீல்களைப் பற்றியும், போலீசாரைப் பற்றியும் அவதூறான கருத்துகள் வெளியாகி வருகிறது. இதை தடுக்கவும், அவதூறான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி, நேற்று வக்கீல்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 13-ந்தேதி முதல், சமூக வலைதளங்களில், தாராபுரத்தின் நீதித்துறை பற்றியும், வக்கீல்களைப் பற்றியும், அவதூறான கருத்துகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக தாராபுரம் குற்றவியல் நடுவர் சி.சசிக்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிபதி அல்லி ஆகியோரைப் பற்றி, சில அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளாக சமூக விரோதிகள் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பதிவுகளை தொடர்ந்து கண்காணித்த வகையில், தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, ஒரு வழக்கு சம்பந்தப்பட்டவர்கள், அவ்வழக்கை சம்பந்தப்படுத்தி, அது தொடர்பாகத்தான் நீதித்துறையையும், நடுவர் மற்றும் வக்கீல்கள் மீதும், அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள் என்பது தெரியவருகிறது.

இந்த சமூகவிரோதிகளின் செயல்களால் நீதித்துறைக்கும், வக்கீல்களுக்கும் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளதோடு, பொது மக்கள் மத்தியில் கெட்டபெயர் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story