மராட்டியத்தில் பா.ஜனதாவை ஓரம் கட்டி விட்டு சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி? - சரத்பவார்- சஞ்சய் ராவத் சந்திப்பால் பரபரப்பு
மராட்டியத்தில் பா.ஜனதாவை ஓரம்கட்டி விட்டு சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சஞ்சய் ராவத் சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
288 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மராட்டிய சட்டசபைக்கு கடந்த 21-ந் தேதி நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆளும் கட்சிகளான பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியதால் அந்த கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்சியில் சமபங்கு கோரிக்கையை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. அதன்படி முதல்-மந்திரி பதவியையும் 2½ ஆண்டுகளுக்கு கேட்கிறது.
ஆனால் இதை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்து விட்டார். அதேநேரத்தில் சிவசேனாவுடன் விரைவில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 1 வாரம் முடிந்த நிலையில் ஆட்சி அமைப்பதற்கான தெளிவான அறிகுறிகள் நேற்று வரை தெரியவில்லை. பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் நீடிப்பது அவசியம் என்று கூறியிருந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், முதல்-மந்திரி பதவி கோரிக்கையை கைவிடவில்லை என்றும் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நாளை(சனிக்கிழமை) மும்பை வர உள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் அவரது மும்பை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அவரது வருகையால் சிவசேனாவுடனான கூட்டணி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், வருகிற 3 அல்லது 4-ந் தேதி பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சரத்பவாருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக சஞ்சய் ராவத் கூறினார்.
இந்த சந்திப்பு காரணமாக சிவசேனா ஆட்சியமைக்க மாற்று வழியை தேடுகிறதா? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜனதாவை ஓரம் கட்டிவிட்டு சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சரத்பவாருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story