ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமி கொலை வழக்கில் வாலிபர் கைது சொத்துக்காக கொன்றதாக வாக்குமூலம்


ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமி கொலை வழக்கில் வாலிபர் கைது சொத்துக்காக கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:30 PM GMT (Updated: 31 Oct 2019 9:13 PM GMT)

ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி (வயது 50). தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவர், தனது தம்பி பூபதி, அவருடைய மனைவி இருவரும் இறந்துவிட்டதால் அவர்களின் 2-வது மகளான ஷோபனா(13) என்பவரை வளர்த்து வந்தார்.

வேதவல்லியின் மூத்த மகன் பாபு(26) திருமணமாகி தனது குடும்பத்துடன் அயனாவரத்தில் வசித்து வருகிறார். 2-வது மகன் மாதவன் வேதவல்லியுடன் வசித்து வருகிறார்.

கடந்த 29-ந்தேதி வேதவல்லி வேலைக்கும், மாதவன் வெளியேயும் சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஷோபனா கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

வாலிபர் கைது

இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வேதவல்லியின் மூத்த மகன் பாபு, வீட்டுக்கு வந்து சென்றதும், சிறுமி கொலைக்கு பிறகு அவர் தலைமறைவானதும் தெரிந்தது. எனவே அவர்தான் சிறுமியை கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான தனிப்படை போலீசார், அயனாவரத்தில் பதுங்கி இருந்த பாபுவை கைது செய்தனர். விசாரணையில், தனது மாமன் மகள் ஷோபனாவை கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசாரிடம் அவர் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-

சொத்துக்காக கொன்றேன்

எனது தாய் வேதவல்லி, என்னுடைய குழந்தைகளைவிட எனது மாமா மகள் ஷோபனா மீதுதான் அதிக பாசத்துடன் இருந்தார். தற்போது என் தாய் வசிக்கும் வீட்டை விற்று பணம் தரும்படி கேட்டேன். அதற்கு அவர் தரமறுத்துவிட்டார்.

அந்த வீடு ஷோபனாவின் பெற்றோருக்கு சொந்தமானது. அந்த வீட்டையும், பணத்தையும் ஷோபனாவுக்கு எனது தாய் கொடுத்து விடுவார் என்று நினைத்து அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்தேன்.

ஷோபனா இருப்பதால் என் குழந்தைகள் மீதும் என் தாயார் பாசம் காட்டவில்லை. சொத்தும் எனக்கு வராது என்று நினைத்து அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி வீட்டில் தனியாக இருந்த ஷோபனாவை தாக்கி, பிளேடு மற்றும் கத்தியால் வெறிக்கொண்டு குத்திக்கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் தொல்லையா?

ஷோபனாவை தான் கற்பழிக்கவில்லை என்று அவர் போலீசார் கூறியுள்ளார். ஆனால் சிறுமியின் அடிவயிறு, தொடை உள்ளிட்ட பல பகுதிகளில் காயங்கள் இருந்ததால் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து அறிய குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடப்பதால் பாலியல் தொல்லை குறித்து உடனே தெரியவில்லை என்றும், டாக்டர்கள் அறிக்கை கிடைத்ததும் அதுபற்றி தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கைதான பாபுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story