புதுச்சேரி விடுதலை நாள்; தலைவர்கள் வாழ்த்து


புதுச்சேரி விடுதலை நாள்; தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 1 Nov 2019 4:00 AM IST (Updated: 1 Nov 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரி விடுதலை நாளையொட்டி கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி,

புதுச்சேரியின் எல்லைக்குட்பட்ட கீழூர் கிராமத்தில் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதியன்று வாக்கெடுப்பின்படி இந்தியாவின் ஒரு அங்கமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் இணைக்கப்பட்டது. இந்தியாவுடனான இணைப்பிற்கு பின்னரும் புதுச்சேரி மற்ற மாநிலங்களைவிட தனித்தன்மையுடன் திகழ்கிறது.

மகான் அரவிந்தரும், மகாகவி பாரதியும் புதுச்சேரியை தமது வசிப்பிடமாக கொண்டு ஆன்மிகத்தையும், தேசியத்தையும் ஒருங்கே வளர்த்தனர். புதுவை ஆன்மிகம், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த பூமியாதலால் உலகெங்கும் உள்ள யாத்ரீகர்கள் இங்குள்ள புதுமையையும், ஆன்மிகத்தையும் நாடி வருகின்றனர்.

புதுச்சேரியின் விடுதலை நாளான இன்று மக்களுக்கு நான் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மையான, பசுமையான மற்றும் நீர்வளம் நிறைந்த புதுச்சேரியை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அந்த செய்தியில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் விடுதலை திருநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் நாள் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் நம் மாநில வரலாற்றின் மகுடமாய் திகழ்கிறது. விடுதலை பெறுவது என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. நம் மண்ணின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்போடு நம்மை செயல்பட வைப்பதே விடுதலையின் முக்கிய நோக்கமாகும்.

எத்தனையோ மகான்களையும், சித்தர்களையும் பெற்ற புண்ணிய பூமியாய் இன்றளவும் புதுச்சேரி தனித்துவமாய் திகழ்வது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். விடுதலை பெற்ற நிகழ்வினை நாம் நம் உயிரினும் மேலாக நேசிக்கவேண்டும். இந்த மண் நம்முடையது. அன்னியர்களின் அதிகாரங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் இங்கே நீண்ட நாட்களுக்கு எடுபடாது என்பது நம் விடுதலை வரலாறு.

நம் அதிகாரங்கள் பறிக்கப்பட்டால் மறம் செறிந்த, அறம் செறிந்த போராட்டங்களின் வாயிலாக அவற்றை விரட்டியடிக்கும் வல்லமை நம் மண்ணின் மைந்தர்களுக்கு உண்டு என்பதும் யாரும் மறுக்க முடியாத, மறக்கப்படாத வரலாறுதான். மக்கள் அனைவருக்கும் என் இனிய புதுச்சேரி விடுதலை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

சபாநாயகர் சிவக்கொழுந்து விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி விடுதலை நாளை மகிழ்ச்சியுடனும், நெஞ்சம் நிமிர்த்தியும் கொண்டாடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுகூடி பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராக ஓட்டளித்து விடுதலை வேள்விக்கு வெற்றிக்கனியை தந்திட்ட நாள் இது. இந்த நன்னாளிலே நமது புதுச்சேரி அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்து நமது மாநிலத்தை மிக சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு உறுதியேற்போம். அதற்கான எல்லா முயற்சிகளுக்கும் தோள் கொடுப்போம். துணை நிற்போம். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஆகஸ்டு 16-ந் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக நாம் இதற்கு முன் கொண்டாடி வந்தோம். 60 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்த வரலாற்று பிழையை நீதியரசர் தாவீது அன்னுசாமி தலைமையில் குழு அமைத்து சரிசெய்து நவம்பர் 1-ந்தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக நேர்படுத்தியது, மக்கள் முதல்வர் ரங்கசாமிதான் என்பதை இந்த தருணத்தில் பாராட்ட வேண்டும்.

விடுதலை போராட்டங்களில் ஈடுபட்ட வீரர்களையும், தியாகிகளையும் நன்றியோடு வணங்கி, அவர்கள் சிந்திய கண்ணீரும், செந்நீரும் புதுச்சேரி வளர்ச்சிக்கு அடியுரமாக பரவி வாழ்த்தி கொண்டிருக்கின்றன. மாநிலத்தின் விடுதலை நாளை கொண்டாடும் இந்த வேளையில் தியாக மறவர்களை வணங்கி மகிழ்கிறோம். வெல்க அவர்களது தியாகம்.

இவ்வாறு அந்த செய்தியில் பாலன் கூறியுள்ளார்.

Next Story