சமுதாய பிரச்சினைகள் குறித்து களஆய்வு: 350 மாணவர்களை தேர்வு செய்ய பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


சமுதாய பிரச்சினைகள் குறித்து களஆய்வு: 350 மாணவர்களை தேர்வு செய்ய பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 1 Nov 2019 9:30 PM GMT (Updated: 2019-11-01T21:56:42+05:30)

சமுதாய பிரச்சினைகளை களஆய்வு செய்து தீர்வு காண்பதற்கு 350 மாணவர்களை தேர்வு செய்வது குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல், 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் மூலம், செயல் அனுபவ வழிக்கற்றல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பிளஸ்-1 மாணவ-மாணவிகள், கற்ற கல்வியை பயன்படுத்தி சமுதாய பிரச்சினைகளை களஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டத்தில் தலா 20 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆத்தூர், ஒட்டன்சத்திரம், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல், பொருளியல் ஆகிய 7 பாடங்களுக்கு தலா ஒரு மாணவர்கள் குழு தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு குழுவிலும் தலா 5 மாணவ-மாணவிகள் இடம்பெறுவார்கள். இதன்மூலம் ஒரு பள்ளிக்கு 35 பேர் வீதம் மொத்தம் 10 பள்ளிகளிலும் 350 மாணவ-மாணவிகள் தேர்வுசெய்யப்படஉள்ளனர்.

இந்த குழுவினர் தாங்கள் கற்ற கல்வியை பயன்படுத்தி சமுதாய பிரச்சினைகளை களஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும். பின்னர் அதை அறிக்கையாக தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்களின் கற்றல் ஆர்வம் மேம்படுவதோடு, தனித்திறமையும் வெளிப்படும். இதற்காக மாணவர்களை தேர்வு செய்து மற்றும் களஆய்வு, தகவல் சேகரிப்பு, தகவல் சேகரிக்க வினாக்கள் தயாரிப்பு, பிரச்சினைக்கு தீர்வு காணுதல் ஆகியவை குறித்து ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.

இதுகுறித்து தேர்வு செய்யப்பட்ட 10 பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடந்தது. இதனை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்பிரிட்டோ தொடங்கி வைத்தார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, தனகிருஷ்ணன் மற்றும் 70 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களை தேர்வு செய்து, களஆய்வுக்கு தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

Next Story