இலந்தைக்கூடம், தொடக்கப்பள்ளி வளாகத்தில் மூடப்பட்ட கிணறு உள்வாங்கியதால் பரபரப்பு


இலந்தைக்கூடம், தொடக்கப்பள்ளி வளாகத்தில் மூடப்பட்ட கிணறு உள்வாங்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 3:30 AM IST (Updated: 1 Nov 2019 11:28 PM IST)
t-max-icont-min-icon

இலந்தைக்கூடம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் மூடப்பட்டு இருந்த கிணறு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி கடந்த 1937-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்தப்பள்ளி தொடங்கப்படுவதற்கு முன்பே அந்த பள்ளி இருக்கும் வளாகத்திற்குள் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு ஒன்று இருந்துள்ளது. பின்னர் காலப்போக்கில் ஆழ்துளை கிணறு, அடி பம்பு, குடிநீர் குழாய்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற வசதிகள் வந்ததால் அந்த கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர். மேலும் அதில் நீர் வரத்து முற்றிலும் தடைபடவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிணறு முற்றிலுமாக மண் கொட்டி மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பள்ளியின் வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் முற்றிலும் மூடப்பட்டு இருந்த கிணறு தற்போது உள்வாங்கியுள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர் சர்மிளா கிணறு உள்வாங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அருகில் இருப்பவர்களின் உதவிகொண்டு கிணறு உள்வாங்கி இருந்த இடத்தில் கற்களை போட்டு தற்காலிகமாக மூடி, பள்ளி மாணவ- மாணவிகளிடம் கிணற்றின் அருகே செல்லக்கூடாது என கூறி எச்சரித்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், உள்வாங்கிய கிணறு சுமார் 10 அடி சுற்றுவட்டத்தில் இருந்ததாகவும், தற்போது 5 அடி சுற்று வட்டத்திலேயே உள்வாங்கியுள்ளதால் மேலும் உள்வாங்க வாய்ப்புள்ளதாக என கூறினர். இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கூடிய விரைவில் இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அந்த கிணற்றை முற்றிலுமாக மூடி பிற்காலத்தில் விபத்துகள் ஏதும் நிகழாத வண்ணம் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மூடப்பட்ட கிணறு மழையினால் உள்வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story