சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு


சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 4:45 AM IST (Updated: 2 Nov 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை முடித்து வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியையும், உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான நடவடிக்கைகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தமிழக தேர்தல் ஆணையத்திடம் இருந்து மாநில தேர்தல் ஆணையம் கேட்டு பெற்றுள்ளது.

அவ்வாறு பெறப்பட்ட எந்திரங்களில் ஏற்கனவே பதிவான வாக்குகளை அழித்துவிட்டு அவற்றை தயாராக வைக்கும் பணியை தொடங்க ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி மேயர், கவுன்சிலர் தேர்தலுக்காக 40,786 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கண்ட்ரோல் யூனிட் பெறப்பட்டு உள்ளது. சென்னை மணலியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.

இந்த பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story